பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கான எல்லா வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம், எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுப்போம் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி எச்சரித்தார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் மீது நடவடிக்கை பாகிஸ்தான் தயங்கி வருவது மிகவும் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எல்லாத் தற்காப்பு நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம் என்று தெரிவித்தார்.
இதுகுறித்துத் தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியதாவது :
எல்லையில் செயல்படும் பயங்கரவாத முகாம்களையும், பயங்கரவாதிகளின் அடிப்படைக் கட்டமைப்புக்களையும் அழிப்பதில் பாகிஸ்தான் தொடர்ந்து தயங்கி வருகிறது. இதுதான் நமது மிகப்பெரிய கவலை ஆகும்.
பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கான எல்லா வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுப்போம்.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டியத பாகிஸ்தான் அரசின் கடமை ஆகும். பாகிஸ்தானில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகின்றன. அவற்றைப் பாகிஸ்தான் முறியடிக்க வேண்டும்.
மும்பையில் நடந்ததைப் போல வேறு ஒரு தாக்குதல் நடக்காமல் தடுக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம்.
ஜம்மு- காஷ்மீர் மாநில எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவும் அயுதமேந்திய குழுக்களின் எண்ணிக்கை கோடைக் காலத்தில் அதிகமாக இருக்கும். எனவே, எல்லையில் நமது படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.