வட இந்தியர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த மராட்டிய நவ நிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவிற்கு எதிராக ஜார்கண்ட் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
வட இந்தியர்களக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மராட்டிய நவ நிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரேவிற்க எதிராக பிணையில் வெளிவர முடியாதபடி பிடி ஆணை பிறப்பித்து ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ராஜ் தாக்கரே எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் வழக்கறிஞர் ஜார்கண்ட் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜார்கண்ட் நீதிமன்றம் பிறப்பித்த பிடி ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ராஜ் தாக்கரே ஜார்கண்ட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.