ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் ஏழாவது நாளாக நீடிக்கிறது. இதுவரை தீவிரவாதிகள் 6 பேரும், பாதுகாப்புப் படையினர் 3 பேரும் பலியாகியுள்ளனர்.
மோதல் நடக்கும் இடம் கடினமான மலைப் பகுதி என்பதாலும், உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருவதாலும் மோதல் தொடர்கிறது என்று இராணுவத் தளபதி தீபக் கபூர் இன்று புது டெல்லியில் தெரிவித்தார்.
இதற்கிடையில், "சுற்றி வளைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கையில், அவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜெய்ஸ் ஈ மொஹம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுகிறோம்." என்று பிரிகேடியர் ஜெனரல் குர்தீப் சிங் மோதல் நடந்து வரும் மெந்தார் வனப்பகுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"மோதல் நடக்கும் இடம் முழுவதும் பாறைகளும், இயற்கையான குகைகளும் நிறைந்துள்ளன. தீவிரவாதிகள் இந்தக் குகைகளுக்குள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாதுகாப்புப் படையினர் மோதி வருகின்றனர்" என்றார் அவர்.
இம்மோதலில் இதுவரை தீவிரவாதிகள் 6 பேரும், பாதுகாப்புப் படையினர் 3 பேரும் என 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.