இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் செல்வது நினைத்தவுடன் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் சென்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டவில்லை. இலங்கைக்குப் பிரணாப் முகர்ஜி போக வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அது உடனடியாக சாத்தியமானதல்ல.
இலங்கைத் தமிழர்களுக்காக இந்த விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி எங்களிடம் கூறி இருக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.