மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானியர்களுக்குத் தொடர்புள்ளது என்பது தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களைத் தாங்கள் நிராகரிக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
"இந்திய அரசு எங்களிடம் கொடுத்துள்ள தகவல்களை நிராகரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவற்றை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என்று இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் சாதிக் மாலிக் கூறினார்.
முன்னதாக மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் சக்திகளுக்குத் தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் இந்தியா நேற்று பகிர்ந்து கொண்டது.
பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கொடுத்த வாக்குமூலம், அவன் உள்பட 10 பயங்கரவாதிகள் கராச்சியில் இருந்து மும்பைக்கு கடல்வழியாக வந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட `லாக் புக்' உள்ளிட்ட ஆவணங்கள், பயங்கரவாதிகள் பயன்படுத்திய செயற்கைக்கோள் தொலைபேசிகள், அவர்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து அவர்களை வழிநடத்தியவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் ஆகியவை அந்த ஆதார தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.