மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மலின் காவல்துறைக் காவலை வரும் 19ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்முறையும் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அஜ்மல் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை. அதற்குப் பதில் அஜ்மல் காவலில் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு பெருநகர கூடுதல் நீதிமன்ற நீதிபதி சென்று விசாரணை நடத்தினார்.
காமா மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சண்டை குறித்து இன்னும் விசாரிக்க வேண்டியிருக்கிறது என அரசு தரப்பில் வாதிடப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தமல் தெரிவித்தார்.
மேலும், காவலர்கள் மீது ஏதேனும் புகார் உள்ளதா என அஜ்மலிடம் நீதிபதி கேட்டதாகவும், அதற்கு அப்படியேதுமில்லை என அஜ்மல் கூறியதாகவும், இதையடுத்து, அஜ்மலின் காவல்துறைக் காவலை வரும் 19ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டதாகவும் தமல் கூறினார்.