இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்த ஆண்டு 4 அயல்நாட்டு செயற்கைக்கோள்களை ஏவுகிறது என்று அதன் வர்த்தகப்பிரிவு நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். ஸ்ரீதரரெட்டி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிங்கப்பூர், நெதர்லாந்து, இத்தாலி, அல்ஜீரியா ஆகிய நான்கு நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஒப்பந்தம் நமக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் நாம் விண்வெளி வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற முடியும்.
சர்வதேச அளவில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செயற்கைக்கோள் எடையில் கிலோவுக்கு 20 ஆயிரம் யூரோதான் நாம் கட்டணமாக நிர்ணயித்து உள்ளோம். இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த கட்டணமாகும்.
எனவே, 2009இல் நாம் விண்வெளித்துறையில் வர்த்தக ரீதியாக முக்கிய இடத்தை நிச்சயமாக பெறுவோம் என்றார் ஸ்ரீதரரெட்டி.