பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில அமைப்புகள், கடந்த நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு துணை போயிருப்பதாக பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில், நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும், ராணுவ துல்லியத்தையும் பார்க்கும் போது, பாகிஸ்தான் அரசின் அமைப்புகளின் ஆதரவு உள்ளதாக பிரதமர் குறை கூறினார்.
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக புதுடெல்லியில் இன்று மாநில முதலமைச்சர்களின் மாநாடு தொடங்கியுள்ளது.
இந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், பேசுகையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில அமைப்புகள் மீது குற்றம்சாட்டினார்.
மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாத காலத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் நேரடியாக குற்றம்சாட்டியிருப்பது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநில பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் கலந்து கொண்டுள்ளார்.