கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்புக் கொடுக்க முடியாவிட்டால் பதவியைவிட்டு விலகி விடுங்கள் என்று ஒரிசா அரசிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
"இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது" என்றும் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது. தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு இவ்வாறு கருத்துக் கூறியது.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமானந்த சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட மதக் கலவரத்தை ஒடுக்குவதில் மாநில அரசு வேகம் காட்டவில்லை என்றும் நீதிபதிகள் குறை கூறினர்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறித்தவர்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்த பிறகு மிக தாமதமாக மாநில அரசு செயல்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒரிசா அரசு நிறைவேற்றி இருக்கிறது என்ற மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலின் வாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.