காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2ஆவது முறையாக இன்று 5.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொது மக்கள் பீதியடைந்தனர்.
இன்று அதிகாலை 4.43 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் பொது மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீடுகளை விட்டுச் சாலைகளுக்கு ஓடி வந்தனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகள் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமுள்ள மண்டலம்-5 இல் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் பூமத்திள ரேகையில் இருந்து வடக்கில் 36.60 டிகிரியிலும் கிழக்கில் 71.0 டிகிரியிலும் ஆஃப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத் தொடரில் மையம் கொண்டிருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவிற்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.