மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் ஆதாரத்தை அந்நாட்டிடம் இந்தியா வழங்கியுள்ளது.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அயலுறவு
அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது என்றார்.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத சக்திகளுக்கு மும்பை தாக்குதலில் தொடர்புடையதற்கான ஆதாரத்தை அளிக்க இந்திய அயலுறவு செயலர் சிவசங்கர் மேனன், பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை தாக்குதல் ‘மன்னிக்க முடியாத குற்றம்’ எனக் குறிப்பிட்ட முகர்ஜி, இந்தியாவிற்கு பாகிஸ்தான் அளித்த உறுதிமொழிகளை அந்நாடு நிறைவேற்றிட வேண்டும் என்றார்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள சக்திகளுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரத்துடன் கூடிய கடிதத்தை சர்வதேச நாடுகளின் அயலுறவு அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.