மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்குவதற்குப் பதிலாக, அந்த ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா அணுகவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் இன்று நடந்த மார்க்சிஸ்ட் கட்சிப் பத்திரிகையான ஜனசக்தியின் 43-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பேசிய அவர், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விரைவில் அமெரிக்கா செல்கிறார்.
அவர் அமெரிக்கா சென்று ஜார்ஜ் புஷ், காண்டலீசா ரைஸ் ஆகியோரை சந்தித்து அதனை கொடுப்பதற்குப் பதிலாக மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அணுக வேண்டும் என்று கூறினார்.
மும்பை தாக்குதலில் அயல்நாட்டைச் சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளதால் இது சர்வதேச பிரச்சனையாகி உள்ளது என்றும் அவர் கூறினார்.
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவின் செயல்களுக்கும் பிரகாஷ் காரத் அப்போது கடும் கண்டனம் தெரிவித்தார்.