Publish Date: Sat, 03 Jan 2009 (19:28 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (19:28 IST)
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.
பாகிஸ்தானின் மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியான இந்தப் பயணத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அமைச்சர் சிதம்பரம் தலைநகர் டெல்லியில் இன்று தெரிவித்தார்.
மும்பைத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களை ஒருங்கிணைக்கும் பணியில் அயலுறவு அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த ஆதாரங்களுடன் அமெரிக்க அதிகாரிகளுடன் தான் விவாதிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் செர்ட்டாஃப், அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் ஆகியோருடனும், அமெரிக்காவின் எதிர்கால அதிபர் பாரக் ஒபாமாவின் குழுவினருடனும் சிதம்பரம் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரத்துடன் அமெரிக்க தூதர் ஆலோசனை
இதற்கிடையில், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் சி முல்போர்டு டெல்லியில் இன்று அமைச்சர் சிதம்பரத்தைச் சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, மும்பை தாக்குதல் பின்னணி குறித்து இந்தியா திரட்டிய ஆதாரங்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாக கருதப்படுகிறது.
பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கொடுத்த வாக்குமூலம், அவன் உள்பட 10 பயங்கரவாதிகள் கராச்சியில் இருந்து மும்பைக்கு கடல்வழியாக வந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட `லாக் புக்' உள்ளிட்ட ஆவணங்கள், பயங்கரவாதிகள் பயன்படுத்திய செயற்கைக்கோள் தொலைபேசிகள், அவர்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து அவர்களை வழிநடத்தியவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் ஆகியவை அந்த ஆதார தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இந்த ஆதாரங்களை அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளுடன் இந்தியா பகிர்ந்துகொள்ளும்.
Webdunia
Publish Date: Sat, 03 Jan 2009 (19:28 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (19:28 IST)