பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.
ஷில்லாங்கில் இன்று 96ஆவது இந்திய அறிவியல் மாநாட்டைத் துவங்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், "இந்தியா இன்று சந்தித்து வரும் இரண்டு மிகப் பெரிய சவால்களானது சர்வதேசப் பொருளாதார நெருக்கடியும் பயங்கரவாதமும் ஆகும்" என்றார்.
இதில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று எச்சரித்த அவர், "மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய, அவற்றின் மூளையாகச் செயல்பட்ட குற்றவாளிகளை பாகிஸ்தான் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மேலும், "பாகிஸ்தானுடன் போரிடுவது பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தராது. ஆனால், மும்பைத் தாக்குதல்களின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட குற்றவாளிகளை விசாரணைக்காக இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்." என்றார் அவர்.
மும்பை தாக்குதலில் தங்கள் நாட்டுச் சக்திகளுக்குத் தொடர்புள்ளது என்பதை நிரூபிக்க இன்னும் வலுவான ஆதாரங்களை இந்தியா தங்களுக்குத் தர வேண்டும் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.