பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் இன்றும் நீடித்து வருகிறது. இதில் சிறப்புக் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இத்துடன் சேர்த்து மோதலில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் வனப் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை மாலை துவங்கிய கடுமையான துப்பாக்கிச் சண்டை இன்றும் நீடிக்கிறது.
குறிப்பிட்ட பகுதி முழுதையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துவிட்ட நிலையில், இன்று காலை துவங்கிய துப்பாக்கிச் சண்டையில் சிறப்புக் காவல் அதிகாரி நரேஷ் குமார் என்பவர் தீவிரவாதிகளின் தோட்டாக்களுக்குப் பலியானார் என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த மோதலில் ஏற்கெனவே இராணுவத்தைச் சேர்ந்த இளநிலை அதிகாரி ராகேஷ் குமார், நாய்க் பி.கே.சிங் ஆகிய இரண்டு படையினரும், நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சண்டை தீவிரமாக நடந்து வருவதால், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.