இந்தியாவில் தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடம் இல்லை என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரித்தார்.
அஸ்ஸாமில் குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு நிலவும் சூழ்நிலை குறித்து இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை நடத்திய அமைச்சர் சிதம்பரம் குவஹாட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருமைப்பாட்டிற்கும் அமைதிக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் யாருக்கும் இங்கு இடமில்லை என்று எச்சரித்தார்.
"நான் பேசுவதை இப்போது கேட்டுக்கொண்டிருக்கும் அல்லது நாளை ஊடகங்களில் படிக்கப்போகும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்கள், உடனடியாகத் தங்களின் நிலையை மாற்றிக்கொண்டு பேச்சு நடத்த முன்வர வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அவர்.
மேலும், இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், மாநிலக் காவல்துறையினர் ஆகியோருக்கு, அமைதிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக உள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையான உத்தரவுகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.