அஸ்ஸாம் தலைநகர் குவஹாட்டியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான குற்றாவளிகளில் 2 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
"பிருபாரி, பனாகார்க் ஆகிய இடங்களில் குண்டுகளை வைத்த நபர்களின் அடையாளம் அஸ்ஸாம் காவலர்களுக்குத் தெரிந்துள்ளது. காவலர்களின் திறமை மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார் அவர்.
குவஹாட்டியில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளது குறித்த உளவுத்துறைத் தகவல்களைக் கடந்த டிசம்பர் 31 அன்று மாநில அரசிற்கு மத்திய அரசு தெரிவித்ததை உறுதி செய்த சிதம்பரம், "நான் நேற்றுகூட முதல்வர் தருண் கோகோயிடம் பேசினேன். காவல்துறையின் உடனடி நடவடிக்கையால் பெரும் அழிவு தவிர்க்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்தக் குண்டு வெடிப்பிற்குக் காரணமாக எந்த இயக்கத்தின் பெயரையும் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். இருந்தாலும், உல்ஃபா இயக்கத்தின் மீது சந்தேகம் அதிகம் உள்ளதாக மாநிலக் காவல்துறையினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனது 2 நாள் சுற்றுப் பயணத்தைத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பிருபாரி, பூத்நாத், பனாகார்க் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 51 பேர் காயமடைந்தனர்.