மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் லஸ்கர் ஈ தயீபா இயக்கத்திற்குத் தொடர்புள்ளது என்பதற்குத் தேவையான வலுவான ஆதாரங்களை இந்தியாவும் சர்வதேச முகமைகளும் கொடுத்துள்ளன; அவை தவறானவை என்று பாகிஸ்தானால் மறுக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல், "மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் லஸ்கர் இயக்கத்திற்குத் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் நம்மிடமும், சர்வதேச முகமைகளிடமும் உள்ளன. அந்த ஆதாரங்கள் தவறானவை என்று பாகிஸ்தானால் மறுக்க முடியாது" என்றார்.
மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், அவர்களை வழிநடத்திய பாகிஸ்தான் சக்திகளுக்கும் இடையில் இணைய வழித் தொலைபேசியில் (Voice over Internet Protocol (VoIP)) நடந்த தகவல் பறிமாற்றம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பயங்கரவாதத்தை அடியோடு அழிக்கும் வரை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும் என்ற கபில்சிபல், "அது ஒரே நாளில் நடக்கக்கூடிய விடயம் அல்ல. வரும் ஆண்டுகளில் நாம் நிச்சயம் பயங்கரவாதத்தை அடியோடு அழிப்போம்.... இது நாங்கள் மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழி" என்றார்.