ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முறைப்படி இணையவுள்ளது.
இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முதல்வர் பதவி ஏற்க இருப்பவருமான உமர் அப்துல்லா, தங்கள் கட்சியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைப்பதற்கு அனுமதிக்குமாறு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளதாகக் கூறினார்.
பல்வேறு பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தேசிய மாநாட்டுக் கட்சி ஆதரவு அளித்திருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிருத்வி ராஜ் சவான் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் மாநில புதிய முதல்வராக உமர் அப்துல்லா, வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.