பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான தேசப் புலனாய்வு முகமை அமைக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக தேசப் புலனாய்வு முகமை ஒன்றை அமைக்க வழிவகுக்கும் சட்டவரைவு, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த வரைவு ஆகியவற்றிற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று ஒப்புதல் தந்துள்ளதையடுத்து, அந்தச் சட்ட வரைவுகள் சட்டங்கள் ஆகியுள்ளன.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்று கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்தார்.
மேலும், "தேசப் புலனாய்வு முகமை அமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் துவங்கியுள்ளன. அதற்கான சட்ட விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன. தேசப் புலனாய்வு முகமைக்கான தலைமை இயக்குநர் இன்னும் சில நாட்களில் நியமிக்கப்படுவார்.
பயங்கரவாத குற்றங்களை விசாரிக்கத்தான் தேசப் புலனாய்வு முகமை அமைக்கப்படுகிறது. எப்போழுது எந்த வழக்கு தேசப் புலனாய்வு முகமைக்கு ஒதுக்கப்பட்டாலும் அதை உடனடியாக முகமை விசாரிக்கும்" என்றார் அவர்.
பயங்கரவாத தடுப்புப் பள்ளிகள்!
பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ளும் பயிற்சியைத் தருவதற்காக நமது நாடு முழுவதும் 20 பயங்கரவாதத் தடுப்பு மற்றும் திட்டமிட்ட தாக்குதல் முறியடிப்புப் பயிற்சிப் பள்ளிகளை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் சிதம்பரம் கூறினார்.
மேலும், பயங்கரவாதம் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல், பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கான, 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
நமது நாடு முழுவதும் நான்கு முக்கிய நகரங்களில் தேசப் பாதுகாப்புப் படை மையங்களை அமைப்பதற்கான குறிப்பு விரைவில் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்த சிதம்பரம், இதுபோன்ற மையங்களை மற்ற நகரங்களிலும் தொடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை!
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் பாகிஸ்தான் தரப்பு ஒத்துழைப்பு குறித்துக் கேட்டதற்கு, "அவர்கள் மறுக்கும் தொனியிலேயே பேசி வருகின்றனர். நாம் கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்து வருகின்றனர்." என்றார்.
"மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் தந்தை தொலைக்காட்சியில் தோன்றியபோது, அவர் (அஜ்மல்) தனது மகன்தான் என்று கூறியுள்ளார்.
அஜ்மலும் தனக்குச் சட்ட உதவி வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிற்குக் கடிதம் எழுதியுள்ளார். இதைவிட வேறு என்ன ஆதாரத்தை பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது" என்று சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள அப்சல் குருவின் தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று கேட்டதற்கு, "மொத்தம் 27 பேர் தூக்கு தண்டனை பெற்றுள்ளனர். அதில் ஒருவர்தான் அப்சல் குரு. அதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்." என்றார் சிதம்பரம்.