ஜம்மு- காஷ்மீரில் அமைந்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி அரசிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்துள்ளது.
மாநில மக்களின் நலனிற்காக புதிய கூட்டணிக்கு நாங்கள் ஆதரவளிக்கவும், அனைத்து உதவிகளையும் செய்யவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஆனால் தங்கள் முன்பு உள்ள கடமைகளை ஆள்பவர்கள் மறந்துவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மொஹம்மது யூசுப் தர்காமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதல்வராகப் பதவியேற்கவுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லாவிற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அவர், "புதிய அரசின் வரவை எதிர்நோக்கி மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு நியாயமான முறையில் அவற்றைச் சமாளிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் ஆதாயங்களுக்காக நடத்தப்பட்ட கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசு செயல்பட வேண்டும் என்றும், பிளவுபட்டுள்ள மக்களை ஒன்றிணைப்பதே அரசின் முன்பு உள்ள தலையாய கடமை என்றும் தர்காமி கூறியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.