எல்லையில் இராணுவ நடவடிக்கைகளை இந்தியா அதிகரித்துள்ளது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாற்றை நிராகரித்துள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கை எதையும் இந்தியா மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.
எல்லையில் இந்தியா படைகளைக் குவிப்பது, விமானத் தளங்களை தயாராக வைக்கப்பது உள்ளிட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியாதான் பதற்றத்தை அதிகரிக்கிறது என்று பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி குற்றம்சாற்றியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி,"எல்லையில் பதற்றத்தை தூண்டும்படி எந்த காரியத்திலும் இந்தியா ஈடுபடவில்லை. எல்லையில் இந்தியா படைகளை குவிக்கவில்லை. எல்லையில் இந்திய இராணுவத்தின் செயல்பாடுகள், வழக்கமாக குளிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்தான் என்று இராணுவம் சொல்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதுதான்.
பதற்றத்தை தூண்டினால்தானே, பதற்றத்தை தணிப்பது என்ற பிரச்சனையே எழும். இந்தியா பதற்றத்தை தூண்டவில்லை எனும்போது, பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற கோரிக்கையே தேவையற்றது. முதலில், பாகிஸ்தான் தனது வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும். பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை அழிக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி செயல்படவில்லை.
மும்பை சம்பவம் தொடர்பாக, இந்தியா அளித்த ஆதாரங்களை வைத்து பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுப்பது நம்பத்தகுந்த வகையில் இருக்க வேண்டும். எனவே, தான் செய்ய வேண்டிய காரியங்களை பாகிஸ்தான் முதலில் செய்யட்டும். மும்பை சம்பவம் பற்றிய விசாரணை, இறுதிக் கட்டத்தில் உள்ளது. அதுபற்றிய விவரங்கள், பாகிஸ்தானிடமும், இதர நாடுகளிடமும் பகிர்ந்து கொள்ளப்படும்" என்றார்.