ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படத் தாங்கள் தயாராக உள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டு சேர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது குறித்துக் கருத்துத் தெரிவித்த மெஹபூபா முஃப்தி, "ஆதரவளிப்பது அல்லது ஆதரவளிக்காதது என்ற பேச்சிற்கு இடமில்லை. கூட்டணி அரசு அமைக்கத் தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெறவில்லை என்று தெரிந்தவுடன், முடிவை காங்கிரஸ் கையில் விட்டுவிட்டோம்." என்றார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், "எதிர்க்கட்சி வரிசையில் அமர நாங்கள் தயாராக உள்ளோம்... நாங்களும் ஒரு கட்சிதான், எங்களுக்கும் ஒரு கொள்கை உள்ளது, பின்பற்றுவதற்கான நிகழ்ச்சிகள் உள்ளன.
அரசமைப்பது என்று ஒருமுறை அவர்கள் (தேசிய மாநாடடுக் கட்சியும் காங்கிரசும்) முடிவெடுத்த பிறகு, மிகவும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட நாங்கள் தயார். இதில் எந்தக் குழப்பமும் இல்லை" என்றார்.
ஜம்மு- காஷ்மீரில் 2002 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அமைத்து, சுழற்சி முறையில் முதல்வர் பதவி வகித்து ஆட்சி செய்தன.
காங்கிரசின் குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தபோது, அமர்நாத் கோயில் வாரியத்திற்கு நிலம் ஒதுக்கும் முடிவிற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி, பின்னர் நில ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புக் காட்டத் துவங்கியது.
அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறக்கோரிய மக்கள் ஜனநாயகக் கட்சி, அதற்கு காலக்கெடுவையும் நிர்ணயித்தது, ஆதரவை திரும்பப் பெறும் அறிவிப்பையும் வெளியிட்டது. அதன் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அரசாணையை முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் திரும்பப் பெற்றப்பிறகும் கூட, ஆதரவை விலக்கிக்கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தது.