ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அடுத்து அமையவுள்ள காங்கிரஸ் உடனான கூட்டணி அரசின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்கவுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று மதியம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடனான உமர் அப்துல்லாவின் சந்திப்பின்போது இது முடிவு செய்யப்பட்டது.
இந்தச் சந்திப்பு குறித்துத் தெரிவித்த உமர் அப்துல்லா, "ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அடுத்து அமையவுள்ள காங்கிரஸ் பங்கேற்புடன் கூடிய கூட்டணி அரசை நான் தலைமையேற்று நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது. பிற நிபந்தனைகள் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்." என்றார்.
தற்போது 38 வயதாகும் உமர் அப்துல்லாதான் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் இளம் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 1987 இல் ஜம்மு- காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்தன.