காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்படுவதால் உள்நாட்டு முதலீடு கடுமையாக பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி எச்சரித்தார்.
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 26 விழுக்காட்டில் இருந்து 49 விழுக்காடாக உயர்த்துவதற்கான சட்ட வரைவு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஒப்புதலிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய யச்சூரி, "இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களே ரூ. 6.5 லட்சம் கோடி நிதியைத் திரட்டும் திறன் கொண்டவை. இந்த நிதியின் மூலம் கட்டுமான திட்டங்களுக்கு நிதி திரட்ட முடியும். நிதி ஆதாரத்தைத் திரட்ட இது சிறந்த வழியும் கூட.
ஆனால், அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்தினால், அவை பிற இடங்களிலிருந்து நிதியைக் கொண்டு வந்து இங்கு முதலீடு செய்யும். பின்னர் அந்நிறுவனங்கள் செயற்கையான விலையேற்றத்தை இங்கு உருவாக்கிவிட்டு, முதலீட்டுத் தொகையை திரும்ப எடுத்துச் செல்லும். இதனால் முதலீடு செய்த உள்நாட்டு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும்.
இதனால்தான் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே இந்தச் சட்ட வரைவு 2004 முதல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது, நொடிந்து போயுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிப்பதற்காகவே இந்தச் சட்ட வரைவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இதேநேரம், உற்பத்தி சார்ந்த துறைகளில் அன்னிய நிறுவனங்கள் அதிக அளவில் ஈடுபடுவதை வரவேற்கிறோம். ஏனெனில் அதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாகும்" என்றார்.