ஜம்மு- காஷ்மீரில் முதல் 3 ஆண்டுகள் ஆட்சியைத் தரும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தங்கள் கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 87 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களே ஆட்சி அமைப்பார்கள் என்ற சூழ்நிலை உள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தனது கட்சியின் மற்ற தலைவர்களுடன் காங்கிரசின் ஆதரவைக் கோருவதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில், யு.என்.ஐ. செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ரவீந்தர் சர்மா, "ஜம்மு- காஷ்மீரில் யாருக்கு ஆதரவு தருவது என்பதைக் கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், முதல் 3 ஆண்டுகள் ஆட்சியைத் தரும் கட்சியுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்பது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பம் ஆகும்" என்றார்.