கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இந்த உயர் மட்டக்குழு கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா, எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைமை இயக்குநர் எம்.எல். குமாவத், கடற்படை, கடலோரக் காவற்படை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்தியப் பாதுகாப்பு அமைப்புகள், கடற்படை, கடலோரக் காவற்படையினர், மாநிலங்க காவல்துறையினர் ஆகியோருக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நமது கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிவேகப் படகுகள், தனித்தன்மை வாய்ந்த சில கருவிகள் ஆகியவற்றை வாங்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உளவு அமைப்புகள் தரும் அடுத்தடுத்த எச்சரிக்கைகளை அடுத்து, மொத்தம் 7,516 கிலோ மீட்டர் நீளமுள்ள நமது கடற்கரைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு முன்னுரிமை தந்து அவற்றைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை அமைச்சகம் தொடங்கிய கடலோரப் பாதுகாப்புத் திட்டத்தில், கடற்கரை ஓரத்தில் உள்ள 9 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் புதிதாக 73 காவல் நிலையங்களை அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.