ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர்களிடம் உமர் அப்துல்லாவை முதல்வராக்குவதற்கு தாம் பரிந்துரை செய்யப்போவதாக ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
உமர் அப்துல்லாவை முதல்வராக்குவது குறித்து தாம் சிந்தித்து முடிவெடுத்ததாகவும் அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இளம் வயது முதல்வர் ஒருவர் பதவியேற்க இருப்பதால், ஏராளமான திட்டங்களை அவர் மேற்கொள்வார் என்றார் ஃபரூக்.
முன்னதாக நேற்று தாம் முதல்வர் பதவியேற்கப் போவதாக ஃபரூக் அப்துல்லா கூறியதால், கட்சியினர் இடையே குழப்பம் நிலவியது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று உமர் அப்துல்லாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
38 வயதான உமர் அப்துல்லா கூறுகையில், தமது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் முதல்வர் பதவியேற்று சிறப்பாக செயல்படப் போவதாகத் தெரிவித்தார்.
தமது தலைமையில் ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோருவதற்காக இன்று புதுடெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரைச் சந்திக்கப் போவதாகவும் உமர் அப்துல்லா கூறினார்.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்தும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் சோனியா காந்தி நேற்று மன்மோகன் சிங் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்னரே தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடும் என்று தெரிகிறது.
எனவே தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது.
மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வென்றுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி 28 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் அக்கட்சி ஆட்சியமைக்க முடியாது.
பிடிபி - மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 21 இடங்கள் கிடைத்துள்ளன. பாஜக 11 இடங்களைப் பெற்றுள்ளன. சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 10 இடங்களில் வென்றுள்ளன.