பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத சக்திகளை அகற்ற சர்வதேசச் சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளை தோல்வியடைந்தால், இந்தியா நடவடிக்கையில் (தாக்குதல்) இறங்கும் என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
இதுகுறித்துப் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், "மும்பை பயங்கரவாதத் தாக்குதலால் விழிப்படைந்துள்ள சர்வதேசச் சமூகம், பாகிஸ்தானை பயங்கரவாதப் பாதையில் இருந்து திருப்பிச் சரியான பாதையில் செலுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த முயற்சிகள் வெற்றிபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அப்படி இல்லை என்றால், பாகிஸ்தானில் இருந்து வரும் தாக்குதல்களை அடியோடு முறியடிக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களின் உதவியுடன் இந்தியா தயாராகும்" என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானைச் சேர்ந்த சில சக்திகள் இந்தியா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் அனைவரும் இந்தியாவில்தான் உள்ளனர் என்று கூறுவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது என்றார் அவர்.
பாகிஸ்தானை தனது நட்பு நாடாகவே இந்தியா கருதுகிறது. இரண்டு நாடுகளிலும் சுதந்திரத்திற்குப் பிறகு மூன்றாவது தலைமுறையினர் பிறந்து வளர்ந்து விட்ட இந்த நேரத்தில், பகைமை பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றார் அமைச்சர் சிதம்பரம்.