கோழிக்கோடு அருகிலுள்ள மராட் கடற்கரையில் நடந்த மதக் கலவர வழக்கில், குற்றம்சாற்றப்பட்ட 139 பேரில் 63 பேர் குற்றவாளிகள் என்றும், 76 பேருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்றும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தக் கலவரத்தில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு மேத்யூ பி ஜோசப், குற்றம்சாற்றப்பட்டுள்ள 139 பேரில் 63 பேருக்கு எதிராக மட்டுமே அரசு தரப்பால் ஆதாரங்களைத் தர முடிந்துள்ளது என்றார்.
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிணை உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்த நீதிபதி, குற்றச்சாற்று நிரூபிக்கப்படாதவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குற்றவாளிகளில் 62 பேர் மீது கொலை குற்றச்சாற்றும், மீதமுள்ள ஒருவர் மீது வழிபாட்டுத் தலத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாற்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 30இல் அறிவிக்கப்படும் என்று நீதிபதி பாபு மேத்யூ பி ஜாசப் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று இவருக்குக் கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி மராட் கடற்கரைக்கு சேலையார் ஆற்றின் வழியாக படகில் வந்த மேல் சாதியைச் சேர்ந்த கலவரக் கும்பல், கடற்கரையில் இருந்த பிற சாதியினரை சரமாரியாகத் தாக்கியதில் 9 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.