மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரத்தை, சவுதி அரேபிய அயலுறவு அமைச்சரிடம் மத்திய அரசு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை தாக்குதல் குறித்தும், அதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஆதரவு கோரியும், இந்தியாவுக்கு இன்று வந்த சவுதி அரேபிய அயலுறவு அமைச்சர் சௌத் அல்-பைசலுடன் நமது அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சு நடத்தினார்.
இப்பேச்சின் போது மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் சக்திகளுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரத்தையும் அவரிடம் பிரணாப் முகர்ஜி வழங்கியதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு இரு தலைவர்களும் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பயங்கரவாதம் என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மட்டும் இடையே உள்ள பிரச்சனை அல்ல. அது அனைத்து உலக நாடுகளுக்கும் உள்ள பிரச்சனை.
இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வரிசையில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை தேவைப்படுமோ அதனை தாமதமின்றி வெளிப்படையான முறையில் மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
முன்னதாகப் பேசிய சவுதி அரேபிய அயலுறவு அமைச்சர் அல்-பைசல், பயங்கரவாதம் புற்றுநோய் போன்றது. அதனை வெட்டி எறிய வேண்டும் என்று கூறினார்.
மேலும் மும்பையில் நடத்தப்பட்டது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை சமாளிக்க சர்வதேச அமைப்பு ஒன்றை ஐ.நா. உறுப்பு நாடுகள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.