இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்தாலும் எல்லை தாண்டிய வர்த்தகத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையில் பதற்றம் நீடித்து வருகிறது. இரண்டு நாட்டுப் படையினரும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரப் போர்ப் பயிற்சிகளும் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி துவங்கப்பட்ட எல்லை தாண்டிய வர்த்தகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. இதைக் குறிக்கும் வகையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
"இன்று பாகிஸ்தானைச் சேர்ந்த வர்த்தகர் மொஹம்மது அக்பர் என்பவர் 150 பெட்டிகள் ஆரஞ்சு, 100 பெட்டிகள் மாதுளை, 252 ஜோடி சிறப்பு சந்தன மரங்கள் ஆகியவற்றை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி உள்ளார்" என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல கடந்த 23ஆம் தேதி இந்திய நிறுவனம் ஒன்று பாகிஸ்தானிற்கு 2,200 கிலோ தக்காளிகளை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
பூஞ்ச்- ராவல்கோட் சாலையில் உள்ள சக்கன்- டா- பாக் எல்லை வழியாகப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன.