லாகூரில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியர் யாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் எதுவும் இல்லை என்று பாகிஸ்தானிற்கான இந்தியத் தூதர் அலுவலகம் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகர் லாகூரில் அரசு அதிகாரிகள் குடியிருப்பில் நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, சதீஷ் ஆனந்த் சுக்லா என்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் உளவு அமைப்புகளை மேற்கொள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
மேலும், கொல்கத்தாவைச் சேர்ந்த சுக்லா லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர் என்றும் பாகிஸ்தான் காவலர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவித்தன.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானிற்கான இந்தியத் தூதரகத்தில் கேட்டதற்கு, "லாகூரில் இந்தியக் குடிமகன் எவரும் கைது செய்யப்பட்டதாக எந்த விதத்திலும் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. நாங்களும் ஊடகங்கள் வழியாகத்தான் தெரிந்து கொண்டோம்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.