மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிற்கு இந்தியா விதித்த கெடு நாளை முடிகிறது. இதனால், இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த நவம்பர் 26இல் கராச்சியில் இருந்து கடல் வழியாக வந்த 10 பயங்கரவாதிகள் மும்பையில் இரண்டு நட்சத்திர விடுதிகள், இரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் நடத்திய தாக்குதலில் 180க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.
இந்தத் தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதலில் பாகிஸ்தான் சக்திகளுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஜெய்ஸ் ஈ மொஹம்மது இயக்கத் தலைவன் மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் கொடுத்த இந்தியா, அவர்களின் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால், மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்று கூறியுள்ள பாகிஸ்தான், `பயங்கரவாத இயக்கங்கள் மீது உறுதியான எந்த நடவடிக்கை எடுக்க, வலுவான ஆதாரங்களை கொடுங்கள்' என்று தொடர்ந்து கேட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்த ஒரு மாத கெடு நாளையுடன் முடிகிறது. இதனால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், நமது விமானப்படையின் மேற்கு மண்டல தளபதி பி.கே.போர்போரா, 'கட்டளை வந்தால் தாக்குதல் நடத்த எந்த நேரமும் தயார்' என்று கூறியுள்ளார்.
மேலும், "இந்திய விமானப்படை உலகிலேயே 4-வது பெரிய விமானப்படை ஆகும். நமது பலத்திற்கு பாகிஸ்தானின் பலம் ஈடாகாது. எந்த சவாலையும் சந்திக்க நாம் தயாராக இருக்கிறோம். இருந்தாலும், போர் என்பது கடைசி கட்ட நடவடிக்கைதான். பாகிஸ்தானுடனான பிரச்சனைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அது முடியாதபோது சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். எல்லா முயற்சிகளும் தோற்றால்தான் போர் நடவடிக்கை வேண்டும்" என்றார் அவர்.
இதற்கிடையில், பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி தாரிக் மஜித்துடன் அந்நாட்டு அதிபர் ஆஷிப் அலி சர்தாரி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், "பாகிஸ்தான் இராணுவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. எந்த தாக்குதலையும் முறியடிக்கும் சக்தி அதற்கு உண்டு" என்று கூறினார்.