உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பிறந்த நாள் விழாவிற்கு நிதி கொடுக்காததால் பொதுப் பணித் துறைப் பொறியாளர் ஒருவரை, பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினரும் அவரது அடியாட்களும் அடித்துக் கொலை செய்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
உத்தரப்பிரதேச முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் பிறந்த நாள் அடுத்த மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, கட்சித் தொண்டர்கள் தீவிர நன்கொடை வசூலில் இறங்கியுள்ளனர்.
சேகர் திவாரி என்ற சட்டமன்ற உறுப்பினரும், பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் சிலரும் சேர்ந்து மாநிலப் பொதுப் பணித் துறையில் செயல் பொறியாளராக இருக்கும் எம்.கே. குப்தா என்பரிடம் ரூ.50 லட்சம் தருமாறு கேட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து திவியாபூர் அருகில் கெயில் விகார் என்ற இடத்தில் உள்ள குப்தாவின் வீட்டிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் திவாரியும், அவரது அடியாட்களும் குப்தாவை அடித்து நொறுக்கினர். இதில் படுகாயமடைந்த குப்தா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இந்தச் சம்பவத்தில் சட்டமன்ற உறுப்பினர் திவாரி உள்பட 3பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடூரத் தாக்குதல்!
இந்நிலையில், குப்தாவின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் குழுவினர் தங்கள் அறிக்கையில், "குப்தா கருணையில்லாமல் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் உள்புறமும் வெளிப்புறமும் பலத்த காயங்கள் உள்ளன. மார்பு, அடிவயிறு, தலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் அடிபட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையில், பொறியாளர் கொலையைக் கண்டித்து சமாஜ்வாடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் கான்பூர் உள்ளிட்ட சில இடங்களில் ரயில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.