ஒரிசாவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில், கலவரங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் இன்று தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைளை எடுக்கும்படி வலியுறுத்தியதுடன், அதற்குத் தேவையான பாதுகாப்பு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "கந்தமால், சம்பல்பூர் ஆகிய மாவட்டங்களில் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பதற்காக மத்திய அரசு ஹெலிகாப்டர் ஒன்றை வழங்கியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மத்திய ரிசர்வ் காவல் படையினர் 2,400 பேர் நீண்டகால பணி அடிப்படையில் ஒரிசாவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர அதிவிரைவுப் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர் என 5,300 காவற்படையினர் ஒரிசாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒரிசாவில், லட்சுமானந்த சரஸ்வதி உள்ளிட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து வெடித்த கலவரத்தில், ஏராளமான கிறித்தவ தேவாலயங்களும், வழிபாட்டுக் கூடங்களும் சேதப்படுத்தப்பட்டன.
பழங்குடி இனங்களில் இருந்து கிறித்தவ மதத்திற்கு மாறிய லட்சக்கணக்கான மக்கள் வனங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.