Publish Date: Wed, 24 Dec 2008 (16:15 IST)
Updated Date: Wed, 24 Dec 2008 (16:15 IST)
ஜம்மு- காஷ்மீரில் இறுதிக் கட்டமாக 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்து வரும் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் எதிர்ப்பாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் இதுவரை 14 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைக்கு ஏழாவது இறுதிக் கட்டமாக இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் ஸ்ரீநகர், ஜம்மு, சம்பா ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
பிற்பகல் 2 மணி வரை 23 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிவினைவாதிகள் ஆதிக்கம் அதிகமுள்ள இந்தத் தொகுதிகளில், தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாகவும், பிரிவினைவாதிகளின் தேர்தல் புறக்கணிப்பு அழைப்பின் காரணமாகவும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீநகர் அருகில் தேர்தலிற்கு எதிராகத் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பிரிவினைவாத அமைப்புக்களின் தொண்டர்களுக்கும், அவர்களைத் தடுத்த பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதில் பத்திரிகைப் புகைப்படக் கலைஞர் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர். அதன்பிறகு வன்முறை கட்டுக்குள் வந்ததாகவும், கூடுதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய தேர்தலில் 31 பெண்கள் உட்பட 393 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 151 வேட்பாளர்கள் சுயேச்சைகள்.
இவர்களில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, முன்னாள் அவைத் தலைவர் தாரா சந்த் உள்ளிட்ட சிலர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இதில் பரூக் அப்துல்லா ஹஸ்ராத்பல், சோனாவார் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பாதுகாப்பு பணிக்காக மத்திய காவற்படையைச் சேர்ந்த 70 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Webdunia
Publish Date: Wed, 24 Dec 2008 (16:15 IST)
Updated Date: Wed, 24 Dec 2008 (16:15 IST)