அமைதி, நல்லிணக்கம் நிலவ பாடுபடுவோம் : தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து
, புதன், 24 டிசம்பர் 2008 (15:04 IST)
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் உலகத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ பாடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி : "இப்புனித பண்டிகை கொண்டாடப்படும் மகிழ்ச்சியான இத்தருணத்தில், இயேச கிறிஸ்துவின் அறநெறிகளை கருத்தில் கொண்டு உலகத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ பாடுபடுவோம். உலகமெங்கும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை மக்களுக்கு வளத்தையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் : "இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் இப்பண்டிகை நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் பெருக்குவதாகவும், சகோதரத்துவத்தையும் பகிர்தலையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் அமையட்டும். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், அவரது அறிவுரைகளையும் நினைவு கூர்ந்து மனித குலத்தின் நலனுக்காக பாடுபட நாம் உறுதி பூணுவோம். ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.