சர்வதேசப் பொருளாதார நெருக்கடி தொழிலாளர் நல அமைச்சகத்தை இந்த ஆண்டு கடுமையாகப் பாதித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் இடையில், தீவிர செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள், பொருளாதார வீழ்ச்சி, சமூகப் பாதுகாப்பு விவகாரங்கள், திறனற்ற பணியாளர்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சி வசதிகள் மேம்பாடு ஆகியவை தொழிலாளர் நல அமைச்சகத்திற்கு கடும் சவாலாக விளங்கின.
சுமார் 4.5 கோடி குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, தொழிலாளர்கள், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களில் வலுவான மாற்றங்களைக் கொண்டு வந்தது ஆகியவை தொழிலாளர் நல அமைச்சகத்தின் சாதனைகள் ஆகும்.
செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுக்க முற்பட்டு, ஒப்பந்தப் பணியாளர்கள் 218 பேரை பணிநீக்கம் செய்ததன் விளைவாக நொய்டாவில் உள்ள இத்தாலி நிறுவனம் ஒன்றின் முதன்மைச் செயல் அதிகாரி பணியாளர்களால் கொல்லப்பட்டார்.
இதனால் பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆத்திரத்துடன் பேசிய தொழிலாளர் அமைச்சர் ஆஸ்கர் ஃபெர்ணாண்டஸ் பின்னர், அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வந்ததால் தனது பேச்சிற்கு மன்னிப்புக் கேட்டார்.
சர்வதேச பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் இழப்பைக் குறைப்பதற்காக நமது நாட்டின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், தனது 6,500 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது.
இதைக் கண்டித்துத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள் உள்ளிட்ட ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியான செய்திகள் ஆகியவற்றால் தொழிலாளர் நல அமைச்சகத்திற்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது.