அசாம் மாநிலத்தில் பழங்குடியின தீவிரவாதிகள் ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்ததில் அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக 700 பயணிகளுடன் சென்ற ராஜ்தானி விரைவு ரயில் தப்பியது.
தலைநகர் கவுகாத்தியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டத்தில் உள்ள கட்கதி கிராமம் அருகே நள்ளிரவு 1 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நடந்ததாக காவல்துறை செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு நடப்பதற்கு 2 நிமிடங்கள் முன்னதாகத்தான் டெல்லியில் இருந்து கிழக்கு அசாமில் உள்ள டின்சுகியா என்ற இடம் நோக்கி சுமார் 700 பயணிகளுடன் வந்த ராஜ்தானி விரைவு ரயில் அந்த வழியாக கடந்து சென்றுள்ளது.
தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். எனினும் அது சரியான நேரத்தில் வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் தண்டவாளத்தின் ஒரு நீண்ட பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த குண்டு வெடிப்பு ராஜ்தானி விரைவு ரயிலை இலக்காக வைத்துத்தான் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் ஆனால் குண்டு வெடிப்புக்கு 2 நிமிடங்கள் முன்னதாக ரயில் அந்த இடத்தைக் கடந்து சென்றுள்ளது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாள சமுதாயத்துக்கு தனி தாய்நாடு கேட்டு போராடி வரும் அனைத்து ஆதிவாசி தேசிய விடுதலை முன்னணி (AANLA) என்ற பழங்குடியின இயக்கத்தினர்தான் இந்த சதிவேலைக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.
குண்டு வெடிப்பு காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் ரயில்வே உயரதிகாரிகள் குண்டுவெடிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.