நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் நடவடிக்கைகளும் இன்று காலவரையற்றுத் தள்ளிவைக்கப்பட்டன.
14ஆவது மக்களவையின் 14ஆவது கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் முடிவடைந்ததையடுத்து அவை காலவரையற்றுத் தள்ளிவைக்கப்படுவதாக அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று மதியம் அறிவித்தார்.
இந்தக் கூட்டத்தொடரின் முதல்கட்டம் ஜூலை 21-22 தேதிகளில் நடந்தபோது, காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆளும் ஐ.மு.கூ. அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்து, 15 மணி நேர விவாதத்திற்குப் பிறகு 275-256 என்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்றது. அப்போது 'வாக்கிற்குப் பணம்' விவகாரம் எழுந்ததால் விவாதம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தின் முதல் பகுதி அக்டோபர் 17- 24 தேதிகளில் நடந்தது. இரண்டாவது பகுதி டிசம்பர் 10இல் துவங்கி இன்று மதியம் முடிவடைந்துள்ளது.
கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தில் 18 அமர்வுகள் 96.15 மணி நேரம் நடந்துள்ளதாக அவைத் தலைவர் தெரிவித்தார். இதில் 22 சட்டவரைவுகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், நிலுவையில் இருந்ததையும் சேர்த்து மொத்தம் 31 சட்டவரைவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தை முறியடிக்க தேசப் புலனாய்வு முகமை அமைப்பதற்கான சட்டவரைவு, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்த வரைவு ஆகியவை இதில் மிக முக்கியமானவையாகும். இந்த பயங்கரவாத தடுப்புச் சட்ட வரைவுகள் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
மாநிலங்களவை
நாடாளுமன்ற மாநிலங்களவையின் 214ஆவது அமர்வு, அமைச்சர் அந்துலேவைப் பதவிநீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய அமளி, காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீடு அதிகரிப்பை எதிர்த்து இடதுசாரிகள் எழுப்பிய அமளி ஆகியவற்றின் இடையில் காலவரையற்றுத் தள்ளிவைக்கப்பட்டது.
உறுப்பினர்களின் அமளியால் தொடர்ந்து மூன்று முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 3 மணிக்கு அவை மீண்டு கூடியதும், இந்த அமர்வு காலவரையற்றுத் தள்ளிவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.
இந்த ஆண்டு உறுப்பினர்கள் வருகை வழக்கத்தைவிட மிகவும் குறைந்து உள்ளதைக் குறிப்பிட்ட அவைத் தலைவர், "விவாதங்கள் அதிகமில்லாமல் சட்டவரைவுகள் நிறைவேற்றப்படுவது நாடாளுமன்றத்திற்கு அழகல்ல" என்று குறிப்பிட்டார்.
சட்டவரைவுகள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நடக்கும் விவாத நேரத்தில் பங்கெடுக்காமல் தவிர்ப்பது, எதிர்காலத் தலைமுறையினரால் விரும்பக் கூடியது அல்ல. குறிப்பாக எதிர்பாராத பயங்கரவாதத் தாக்குதல்கள், சர்வதேச, உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகள் போன்ற கடினமான நேரங்களில் அவைக்கு வருவது கவனிக்கப்படும் என்றார் அவர்.
இதேபோல, அமர்வு தள்ளிவைக்கப்படுவதற்கு முன்பு பிரதமர் (மன்மோகன் சிங்), எதிர்க்கட்சித் தலைவர் (ஜஸ்வந்த் சிங்) ஆகியோர் உரையாற்றும் பாரம்பரிய வழக்கமும் இந்த முறை கடைப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.