நமது நாடு முழுவதும் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் நடந்த 75 காவல் மரணங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது, "உத்தரப் பிரதேசம்தான் காவல் மரணங்களில் முதலிடம் வகிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 14 வழக்குகளில் நடந்த காவல் மரணங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.21.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது." என்றார்.
தேசிய மனித உரிமைகள் ஆணைய விவரங்களைக் குறிப்பிட்ட அமைச்சர் அகமது, 2005இல் ரூ.3.50 லட்சம் (6 வழக்குகள்), 2006இல் ரூ.5.25 லட்சம் (7 வழக்குகள்), 2007இல் ரூ.34.50 லட்சம் (24 வழக்குகள்), 2008இல் ரூ.56.25 லட்சம் (38 வழக்குகள்) என்றவாறு இழப்பீடு தரப்பட்டுள்ளது என்றார்.
2008இல் அதிகபட்சமாக 9 வழக்குகளில் ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரப் பிரதேசத்திற்கும், 8 வழக்குகளில் ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஆந்திரப் பிரதேசத்திற்கும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது என்றார் அகமது.
ஒட்டுமொத்தமாக 2008இல் அஸ்ஸாம், மராட்டியம், ஒரிசா, ஜார்கண்ட், குஜராத், பீகார், டெல்லி உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.