Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்துலேவிற்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி, தள்ளிவைப்பு

Advertiesment
அந்துலேவிற்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி, தள்ளிவைப்பு
, செவ்வாய், 23 டிசம்பர் 2008 (13:13 IST)
மத்திய அமைச்சர் அப்துல் ரஹ்மான் அந்துலே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க. கூட்டணியினரும், காப்பீடு சட்டத்தில் திருத்தம் செய்யும் சட்ட வரைவையும் எதிர்த்து இடதுசாரிகளும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் தள்ளி வைக்கப்பட்டது.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும், மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது கொல்லப்பட்ட மராட்டிய மாநில காவல் அதிகாரி ஹேமந்த் கார்க்கரே கொல்லப்பட்டது தொடர்பாக சந்தேகம் எழுப்பிய அந்துலே பதவி விலகக்கோரி அவையி்ன் மையப் பகுதிக்கு வந்து பா.ஜ.க., சிவசேனை கட்சியினர் முழுக்கமிட்டனர்.

அதேநேரத்தில், காப்பீடுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49 விழுக்காடு வரை உயர்த்த அனுமதிக்கும் சட்ட திருத்த வரைவை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் முழுக்கமிட்டனர்.

உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இடங்களுக்கு சென்று அமருமாறு அவைத் தலைவர் ஹமித் அன்சாரி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் உறுப்பினர்கள் செவிசாய்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணிவரை தள்ளிவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

மக்களவையும் தள்ளிவைப்பு!

இதேபோல நாடாளுமன்ற மக்களவையிலும் அந்துலே பதவி விலகக் கோரி பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையை இயங்க விடாமல் செய்ததால் அவை தள்ளிவைக்கப்பட்டது.
இன்று காலை மக்களவை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பல்தேவ் சிங் ஜாஸ்ரோட்டியா, அஸ்ஃபாக் ஹூசேன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பிறகு, பேச எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, தனது கருத்தால் பாகிஸ்தானில் நாயகனாகியுள்ள அமைச்சர் மீது நாங்கள் கோபமுற்றுள்ளோம் என்று கூறினார்.

அத்வானி பேசியதைத் தொடர்ந்து பா.ஜ.க. உள்ளிட்ட உறுப்பினர்கள் தொடர்ந்து அந்துலேக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதற்கிடையே, பேச எழுந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாசுதேவ் ஆச்சாரியா, காப்பீடு சட்ட திருத்த வரைவை அரசு திரும்பப் பெறவேண்டும் என்று கூறினார்.

இந்தக் கூச்சல் குழப்பத்திற்கு இடையே பேசிய அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, அந்துலே கருத்தின் மீது அரசு நிலை என்ன என்பதை எப்போது அறிவிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதனைக்கேட்ட நாடாளுமன்ற விவகாரத் துணை அமைச்சர் வயலால் இரவி, மத்திய அமைச்சர்களுடன் கலந்தோலோசித்துவிட்டு, இன்று நண்பகல் 12 மணிக்கு அரசு பதிலளிக்கும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை 12 மணிவரை தள்ளிவைத்தார் சோம்நாத் சாட்டர்ஜி.

மீண்டும் தள்ளிவைப்பு

இரு அவைகளும் மீண்டும் 12 மணிக்கு கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் 2 மணிவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் அந்துலே பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் நாள் முழுவதும் இரு அவைகளிலும் நேற்று முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil