மும்பை மீதான பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் பாகிஸ்தான் அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொல்கட்டாவின் பெங்கால் வர்த்தக சபையில் நடந்த மாநாட்டில் இன்று பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, மும்பை தாக்குதல் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களை பாகிஸ்தான் வெளியிட்டு வருவதாகவும், இதுபற்றி போதுமான ஆதாரங்கள் கொடுத்துள்ளதால் அந்நாடு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும். எனவே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பேசியதோடு நிற்காமல் அதனை பாகிஸ்தான் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இடம் வழங்கப்படாது என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், தற்போதிய அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் கோருகிறோம்.
இந்தியத் தரப்பில் போதுமான ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, ஒருமுறையல்ல, இருமுறை அல்ல, 10க்கும் அதிகமான முறை அந்நாட்டில் செயல்படும் பயங்கரவாதிகள் பற்றி ஆதாரங்கள் அளிக்கப்பட்டுவிட்டது. எனவே அந்த ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு நாட்டின் (பாகிஸ்தான்) சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், இதுவரை இந்தியா தரப்பில் கூறப்படுவது என்ன? நாங்கள் தேடும் சில குற்றவாளிகள் உங்கள் (பாகிஸ்தானில்) தலைமறைவாக உள்ளனர். தயவுசெய்து அவர்களை கைது செய்யுங்கள். அவர்களில் இந்தியர்கள் யாராவது இருந்தால் அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள்.
அதேபோல் பாகிஸ்தானியராக இருந்தாலும், இந்தியாவால் விசாரிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாக இருந்தால் அவர்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள் என்றுதான் கோரி வருகிறோம்.
மசூத் அஸார் இல்லையா?: மசூத் அஸார் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறினாலும், அவர் பாகிஸ்தானின் காவலில் இல்லை. அவர் எங்கள் நாட்டில் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின்றன.
அப்படி அஸார் பாகிஸ்தானில் இல்லையென்றால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள அந்நாட்டின் உறுப்பினர் மசூத் அஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எப்படிக் கூற முடியும் என்றும் பிரணாப் முகர்ஜி கேள்வி எழுப்பினார்.