புதிய கப்பல்கள், ராடார்கள், கண்காணிப்பு நிலையங்களை கொண்டு கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பாதுகாப்புத் துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மும்பை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கடல் வழியைப் பயன்படுத்தியுள்ள தகவல், நமது கடலோரப் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கடற்படையும் தனது பலவீனத்தை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், நமது கடலோரப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காகப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையில் நடந்த உயர் மட்டக் கூட்டத்தில், கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பல்வேறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிநவீனத் தொழில்நுட்பங்கள் கொண்ட ராடார் கருவிகள், இடைமறிப்பு மோதல் விசைப் படகுகள், 70 எண்ணிகையிலான சிறிய, பெரிய படகுகள் ஆகியவற்றை சர்வதேசச் சந்தையில் இருந்து வாங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள 13 கடலோரக் காவற்படை நிலையங்களுடன் மேலும் 9 நிலையங்களைப் புதிதாக அமைக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பரிந்துரைகள் விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றும் பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடந்துள்ள இந்த உயர் மட்டக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலர் விஜய் சிங், கடலோரக் காவற்படைத் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனில் சோப்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.