எல்லை தாண்டிய வர்த்தகம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தவிருந்த மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
"பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அதிருப்தி தருவதாக உள்ளதால், நாம் கவனமாக இயங்க வேண்டியுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், பணிகளை வழக்கம்போலத் தொடர முடியாது" என்று அவர் கூறினார்.
வருகிற ஜனவரி மாதம் பாகிஸ்தான் செல்லவிருந்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கடந்த அக்டோபர் 21ஆம் தேதி துவங்கப்பட்ட எல்லை தாண்டிய வர்த்தகம், வாகா- அட்டாரி எல்லை வழியான வர்த்தகத்தை வலுப்படுத்துதல் ஆகிய முக்கிய விடயங்கள் குறித்துப் பாகிஸ்தானுடன் விவாதிக்கவிருந்தார்.
தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்!
பாகிஸ்தானிற்கு இந்த ஆண்டு 15 மில்லியன் முதல் 20 மில்லியன் வரை தேயிலை ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு பாகிஸ்தான் உடனான எல்லா உறவுகளும் துண்டிக்கப்பட்டுள்ளதன் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் ஆஷிஃப் அலி ஜர்தாரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது, வாகா எல்லை வழியாகவும் இரயில் மூலமும் பாகிஸ்தானிற்கு தேயிலை கொண்டுசெல்ல அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.