பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பயங்கரவாதிகளின் ஆயுதங்களை செயலிழக்கச் செய்யும் வகையிலான நவீன தொழில்நுட்ப முறைகளை உருவாக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய பிரதமர், "சர்வதேச பயங்கரவாதம், குற்றங்களின் தனித்தன்மை அதிகரித்துவரும் நிலையிலும் நமது பாதுகாப்பு அமைப்புகள் அமைதியைப் பேண வேண்டும் என்றால், பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம் என்று நான் நம்புகிறேன்.
கணினி உதவியுடன் நடக்கும் தாக்குதல்களை தடுத்தல், தொழில்நுட்பத் தகவல்களை அடையாளம் காணுதல், கிரிப்டோகிராஃபி, கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான உழைப்பு அவசியம்." என்றார்.
சில நாடுகள் தங்களின் பாதுகாப்பு அமைப்புகளில் நவீன அறிவியல், தொழில்நுட்பங்களை மிக நல்ல முறையில் பயன்படுத்தி வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், பயங்கரவாதத்தை முறியடிக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நமது விஞ்ஞானிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.