உலகின் இரண்டாவது பெரிய யுரேனிய கனிம வளம் பெற்றுள்ள நாடான கசகஸ்தான், இந்தியாவிற்கு யுரேனியம் வழங்கத் தயாராக உள்ளதென தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நடந்த ‘இந்தியா-கசகஸ்தான் - பிரச்சனைகளும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்நாட்டு எரிசக்தி நிபுணர் மாரட் சைகுட்டினோவ், எரிசக்தி ஒத்துழைப்புத் தொடர்பாக இந்தியாவுடன் ஒரு விரிவான ஒப்பந்தத்தை கசகஸ்தான் விரும்புகிறது என்று கூறினார்.
இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதில் கசகஸ்தானிற்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிய சைகுட்டினோவ், இந்தியாவிலிருந்து இயற்கை எரிவாயுவையும், கச்சாவையும் பெற கசகஸ்தான் விரும்புகிறது என்று கூறினார்.
கசகஸ்தான் நாட்டு அதிபர் நூர் சுல்தான் நஜர்பயீவ் இன்று இந்தியா வரவுள்ளதை முன்னிட்டு டெல்லியில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.
பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக இந்தியாவும்-கசகஸ்தானும் 2002ஆம் ஆண்டிலேயே ஒத்துழைக்க ஒப்புக்கொண்டு, அதற்கென ஒரு பணிக்குழு உருவாக்கியதாகவும், ஆனால் அது சில முறை சந்தித்துப் பேசியது தவிர பெரிதாக எதையும் செய்யவில்லை என்று சைகுட்டினோவ் கூறினார்.
இந்தியாவின் முன்னாள் அயலுறவுச் செயலரும், சர்வதேச உறவுகளுக்கான ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான எம்.கே. ராஸ்கோத்ரா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அரும் பெரும் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியது என்று கூறினார்.