மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது ஹேமந்த் கார்கரே உள்ளிட்ட மூன்று முக்கிய அதிகாரிகளைக் கொலை செய்தது காவல்துறைக்குள் உள்ள சில சக்திகள்தான் என்று புதிதாக உருவாகியுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பு குற்றம்சாற்றியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பேச்சாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான சுதிர் சவன்த்,"மும்பைக்குள் 10 பயங்கரவாதிகள் நுழைந்த நாளான நவம்பர் 26 அன்று இரவு, மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கார்கரே, காவல்துறை கூடுதல் ஆணையர் அசோக் காம்தே, என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய் சலாஸ்கர் ஆகிய 3 பேரும் 9 எம்.எம். துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த சவன்த்திடம், தடயவியல் சோதனை விவரங்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கை போன்ற, குற்றச்சாற்றிற்குத் தேவையான ஆதாரங்கள் உள்ளதா என்று யு.என்.ஐ. செய்தியாளர் கேட்டதற்கு, "தற்போது எங்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை, சூழ்நிலையைத் தவிர. அதனால்தான் நீதி விசாரணை வேண்டும் என்று கோருகிறோம். விசாரணைக்குப் பிறகு உண்மை வெளிவரும்" என்றார்.
மேலும், "மாலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கை விசாரித்த கார்கரேதான் இந்துத்துவா- மனுவாதி பயங்கரவாதத்தை உலகிற்குக் காண்பித்தார். இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்ற தோற்றத்தை அவர் கிழித்தெறிந்தார். ஆனால், அதை முடிப்பதற்குள் அவரும் மற்ற இரண்டு அதிகாரிகளும் காமா மருத்துவமனை அருகில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர்." என்றும் சவன்த் கூறினார்.