'எனது கருத்துக்களால் மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் நிச்சயமாகப் பெருமைப்பட வேண்டும்' என்று அமைச்சர் அந்துலே கூறினார்.
மாலேகான் குண்டு வெடிப்புகள் வழக்கை விசாரித்துவந்த மராட்டியப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கார்கரே மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது கொல்லப்பட்டது தொடர்பாக சந்தேகம் தெரிவித்துள்ள மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் அந்துலேவிற்கு பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து அவர் தனது பதவிவிலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி உள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் அமைச்சர் அந்துலே இதை உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ இல்லை.
மேலும் அவர் கூறுகையில், "நான் எப்போதும் உண்மையின் பக்கம்தான் நிற்பேன். எனது கருத்துக்களால் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் நிச்சயம் பெருமைப்பட வேண்டும். நான் எனது கட்சியின் ஒழுக்கமான சிப்பாய். கட்சி என்ன சொல்கிறதோ அதைச் செய்வேன்" என்றார்.
அந்துலேவின் கருத்துக்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துக்களே என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அந்துலே விவகாரத்தில் விரைவில் பதிலளிப்பதாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.